மக்கள் மருத்துவப்பணி

சித்தர் திருவிழா


சித்த மருத்துவத்தின் சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சித்தர் திருவிழா என்னும் கண்காட்சி முதன்முதலாக 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. சித்தர் திருவிழாவில் ஆயிரம் மூலிகைகள் கொண்ட மூலிகை கண்காட்சியும்,சித்த மருத்துவ கருத்தரங்கமும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தால் நடத்தப்பட்டது.

மூலிகை மாணவர் திட்டம்

Mobirise

மரபாக தொடரும் மருத்துவ அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பொருட்டு மூலிகை மாணவர் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி எங்கும் மூலிகைப் பசுமை என்னும் இலக்குடன் 2007ஆம் ஆண்டு முதல் மூலிகை மாணவர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட தேசிய பசுமைப்படை, மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம், மாவட்ட கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மூலிகைத் தோட்டத்தை உருவாக்கும் திட்டமே இதன் அடிப்படை நோக்கம். 2007மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள 250 க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 40 வகையான மூலிகைக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளோம். 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மூலிகை மரக்கன்று வழங்கி வருகிறோம். இதுவரை நாவல், புன்னை, மருது, நோணி, களா என ஐந்து வகையான மரக்கன்றுகள் வழங்கியுள்ளோம். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு கலந்துரையாடி வருகிறோம். பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தொழிலை பள்ளிக்கூட மாணவர்கள் அவ்வப்போது குழுவாக வந்து பார்வையிட்டு செல்வதோடு, மூலிகைகளையும் இனங்கண்டு, மூலிகை கன்றுகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

காய்ச்சல் தடுப்பு
இலவச கசாய முகாம்கள் 


2009 ஆம் ஆண்டு தமிழகத்தை வாட்டி வதைத்த காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள், இலவச காய்ச்சல் குடிநீர் வழங்கும் முகாம்கள் நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டது.
 
2013 - 14 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தமிழகத்தை வாட்டி வைத்த காய்ச்சல்களில் ஒன்றான டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், நிலவேம்பு குடிநீர் இலவச மருத்துவ முகாம்கள் நெல்லை மாவட்டடம் முழுவதும் நடத்தப்பட்டது.மூன்று மாதங்களில் 128 க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டது

கடந்த சில ஆண்டுகளாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கு சித்த மருத்துவ நிலவேம்புக் குடிநீர் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்களை உலகத் தமிழ் மருத்துவக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட இலவச நிலவேம்புக் குடிநீர் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் மக்கள் பங்கேற்புடன் 300 முதல் 500 லிட்டர் வரை நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.நிலவேம்புக் குடிநீரில் சேரக்கூடிய மருந்துப் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது. நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து ஒரு கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக கருத்தரங்கம் நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.


அஞ்சறைப்பெட்டி திட்டம்


2010ஆம் ஆண்டு இல்லத்தின் மருத்துவராகிய குடும்பத் தலைவிகள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக்கூடிய சித்த மருந்துகளைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய அஞ்சறைப்பெட்டி திட்டம் தொடங்கப்பட்டது.
வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி சரக்குகள், வீட்டு மூலிகைத் தோட்ட மூலிகைகளைக் கொண்டும் குடும்பத்தில் நலவாழ்வை மீட்டெடுக்கும் முயற்சி அஞ்சரை பெட்டி திட்டமாகும். இத்திட்டம் குடும்பத் தலைவிகளுக்கான சமூக மருத்துவ கருத்தரங்கம் ஆகும். 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மருத்துவக் கழகம், திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், மாநகராட்சி சுய உதவி குழுக்கள், பாரத் ஹெரிடேஜ் பவுண்டேஷன், பாளையங்கோட்டை அன்னை அரவிந்தர் தியான மண்டபம் ஆகியவற்றுடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு குமரி பக்குவம், ஆடாதோடை மணப்பாகு,சோகை மாத்திரை, நன்னாரி மணப்பாகு, பாவன பஞ்சங்குலத் தைலம் முதலிய வீட்டு மருந்துகளின் தயாரிப்பு முறைகளை முறையாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.


பல்பூந்தணக்கம் விழா


நோனி பழச்சாறு மிகுதியான விலையில் சந்தையில் விற்கப்பட்டு வந்தது. அதனை முறியடித்து எளியவர்களும் குறைந்த விலையில் பெரும் பொருட்டு, வீட்டிலேயே நோனி மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றியும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்குவதற்காக பல்பூந்தணக்கம் விழா 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டு நோனி மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஆயிரம் வேர்த் திருவிழா


உலகத் தமிழ் மருத்துவ கழகம், பசுமைவிகடனுடன் இணைந்து 2015ஆம் ஆண்டு ஆயிரம் வேர்த் திருவிழா என்னும் நிகழ்ச்சியைப் பாபநாசத்தில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகம் எங்கும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மூலிகை முற்றம்

பொதுமக்கள் மூலிகைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு மூலிகைகளை அறிமுகப்படுத்தி பயன்படுத்தும் பயிற்சி மூலிகை முற்றம் என்ற பெயரில் 2017ம் ஆண்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.உலகத் தமிழ் மருத்துவக் கழக நிகழ்ச்சிகளில் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் மூலிகை முற்றம் நிகழ்ச்சியும் ஒன்றாகும். மூலிகை முற்றம் தொடர் பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்துடன் இணைந்து மாவட்ட அறிவியல் மையத்தில் நடத்தப்பட்டது.தொடர் வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மூலிகைக் கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

 

2019ஆம் ஆண்டு மீண்டும் மூலிகை முற்றம் 2.0 தொடர் பயிற்சி நிகழ்ச்சி பாவநாசம் உலகத் தமிழ் மருத்துவக் கழக மாநில வள மையத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


This site was designed with Mobirise